தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்ததால் பள்ளிகளை திறக்க தற்போது வரை அரசு அனுமதிக்கவில்லை.
அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் வீடியோவாகவும், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே, இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி உள்ளன. இந்நிலையில், அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 10-ந் தேதி தொடங்கி 23-ந் தேதிக்குள் முடிக்கப்படும்.
ஆனால், நடப்பாண்டில் இதுவரையில் பள்ளிகள் திறக்கப்படாததால் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மாதிரி தேர்வாக நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகள் திறக்கப்படாததால் அரையாண்டு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
