போலந்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதை அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஆளும் law and justice கட்சி சார்பில் அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் எதிர்கட்சியான civic platform கட்சி சார்பில் பெண் வேட்பாளாரான மல்கோர்சாட்டா கிடாவா பிளான்ஸ்கா களமிறக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடித்திருந்த நிலையில் உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று போலந்தையும் ஆக்கிரமித்தது.
நாளுக்கு நாள் அங்கு பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதாக அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா அறிவித்தார்.
இந்நிலையில் அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் அந்நாட்டில் எழத்தொடங்கின. இந்நிலையில் ஜூன் 27ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவாளரான ஆண்ட்ரேஜ் டூடா, 51 சதவீத வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வார்சா மாநக மேயரான Rafal Trzaskowski-ஐ விட 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி வாகை சூடினார்.
அதே சமயம், 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ள Rafal Trzaskowski பலம் வாய்ந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கொரோனா அச்சத்தை தவிர்த்து ஏராளமானோர் வாக்கு செலுத்த வந்திருந்தனர்.