ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேதத்தை சீர் செய்ய அவசரகால நிதியில் இருந்து ஜப்பானிய என் மதிப்பில் சுமார் இரண்டு பில்லியன் ஒதுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நாட்டின் தெற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக தெற்கு ஜப்பானின் கியாசு தீவு பகுதியில் சில இடங்களில் கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரு மணி நேரத்தில் சுமார் 80 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் 480க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நிலைமையை சீர் செய்வதற்காக ஜப்பான் நாட்டு அரசு போர்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் அந்நாட்டின் அவசர கால நிதியை பயன்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.