லெபனான் நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக போவதில்லை என ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.
லெபனான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. டாலருக்கு நிகரான லெபனானின் நாணய மதிப்பு தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பெரும்பகுதி மக்கள் உணவு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஹசன் டயப் அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
லெபனானில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அதன் வரலாற்றிலேயே மிக மோசமானது. லெபனான் மிக வேகமாக சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தருவதில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து லெபனான் பிரதமர் பதவி விலகப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அந்தச் செய்தியில் உண்மையில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.”நான் ஆட்சியில் இருக்கும்வரையில் லெபனான் வேறு யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் செல்லாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சரி செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது” என்று ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.