மின்னல் தாக்கியதில் விளையாடச் சென்ற 10 குழந்தைகள் பலி…

உகாண்டாவில், மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உகாண்டாவின் வடமேற்கு நகரமான அருவாவில், ஒரு மைதானத்தில் குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று இடியுடன் கூடிய கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எனவே, மழையில் நனையாமல் இருக்க, குழந்தைகள் அனைவரும் அருகே இருந்த ஒரு குடிசை வீட்டிற்குள் ஒதுங்கியுள்ளனர்.

அப்போது அந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியதில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 9 குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றுமொரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மழைக் காலங்களில் மின்னல் தாக்குவது அதிகளவில் நடப்பது குறிப்பிடத்தக்கது. 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு, உகாண்டாவில் நடந்த மிக மோசமான விபத்து இதுவாகும். 2011-ஆம் ஆண்டில், உகாண்டாவில் மேற்கு பகுதியில், ஒரு பள்ளியில், 18 குழந்தைகள் மின்னல் தாக்கியதில் இறந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version