ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் கிட்டத்தட்ட 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் 40 பேர் படுகாயமடைந்தனர் என்றும் ஆப்கானிஸ்தானின் செய்தி நிறுவனமான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
மேலும்,காயம் அடைந்தவர்கள் மிர்வைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும்,இது ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால்,இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.மேலும், அரசு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்படவில்லை.
முன்னதாக,ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்ததில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.