நீச்சல் குளத்தில் விழுந்து மூழ்கிய தனது நண்பனை துணிச்சலுடன் காப்பாற்றிய 3 வயது சிறுவன்!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில், 3 வயது சிறுவன் ஒருவன், நீச்சல் குளத்தில் விழுந்து மூழ்கிய தனது நண்பனை காப்பாற்றியுள்ளான். இந்த துணிச்சலான செயலை செய்த அந்த சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், இட்டாபெருனா பகுதியில் ஆர்தர் டி ஒலிவியரா என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். ஆர்தரும் அவனது நண்பன் ஹென்ரிக்கும், நீச்சல் குளத்தில் பொம்மையை தண்ணீரில் தூக்கிப் போட்டும், அதனை தள்ளி விட்டும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென ஹென்ரிக் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்து விட்டான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஆர்தர்,  உதவிக்காக யாரேனும் அருகில் உள்ளனரா எனப் பார்த்துள்ளான். ஆனால், உதவிக்கு அருகில் யாரும் இல்லை. இந்நிலையில், தலையை மேலே கொண்டு வர முயற்சித்துக் கொண்டுருந்த ஹென்ரிக்கை, ஆர்தர் குளத்தில் கையை நீட்டி, இறுகப் பிடித்து, மேலே தூக்கி வெளியே கொண்டு வந்துள்ளான். ஆர்தர் துணிச்சலுடன் துரிதமாய் செயல்பட்டு, தனது நண்பன் ஹென்ரிக்கை காப்பாற்றியது அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோவை ஆர்தரின் அம்மா, பொலியானா கன்சோல் டி ஒலிவியரா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ஆர்தரின் நண்பன் ஹென்ரிக் உயிர் பிழைத்ததற்கு, எனது மனம் நன்றி சொல்கிறது என்றும், என்னுடைய மகனின் துணிச்சல், பாசம் மற்றும் உடனடியாக செயல்பட்டதற்காக நான் பெருமை கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

சிறுவன் ஆர்தரின் துணிச்சலான செயலை அறிந்த போலீசார், சிறுவனுக்கு ஒரு கூடை நிறைய இனிப்புகளையும், புது கூடைப்பந்து ஒன்றையும் பரிசாகக் கொடுத்து, அவனை பாரட்டியும் சென்றுள்ளனர். மேலும், சிறுவன் ஆர்தருக்கு சான்றிதழையும், கோப்பையையும்  வழங்கிப் பாரட்டியுள்ளனர். மேலும், இந்த வீடியோவைப் பார்த்தப் பலரும், உலகெங்கிலும் இருந்து ஆர்தருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களயும், ஆசீர்வாதங்களையும் கூறி வருகின்றனர்.

Exit mobile version