சுற்றுச்சூழல் ரீதியாக பருவநிலை மாற்றங்களைத் தீர்மானிக்கும் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 586 பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக சேர்ந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு க்ரீன்லாந்து பனிக்கட்டி நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதில் இதுவரை இல்லாத அளவிற்கு, காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டிகள் உருகியிருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் கடல் நீர் மட்டம் 1.5 மில்லி மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003 முதல் இங்கு சராசரியாக ஆண்டிற்கு 259 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டிகள் உருகிவரும் நிலையில் , 2017 மற்றும் 2018ல் இந்த பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது பனி உருகல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஏற்பட்ட பனி உருகலை கொண்டு கலிபோர்னியா அளவுள்ள மாகாணத்தை 4 அடி உயரத்துக்கு நீரால் சூழும் அளவுக்கு இந்தப் பனி உருகல் அளவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2012-ல் கிரீன்லாந்தில் 511 பில்லியன் டன் அளவுக்கு பனி உருகியதே அதிகபட்சமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில், பனி உருகுவது மட்டுமின்றி அதிவேகமாக உருகி வருவதால் நிலப்பரப்பை நோக்கி நீரின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.