இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
ராமேஸ்வரம் கடலில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் சுற்றிவளைத்து,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று மன்னார் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 3 படகில் சென்ற 22 மீனவர்களை வருகின்ற 18 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 7 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து 29 மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.