கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக கூறி அர்ஜென்டினாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் விதமாக புதிய சட்டம் ஒன்றுக்கு, டிசம்பர் மாத இறுதியில் அர்ஜென்டினா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி இருந்தது. நேற்று பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற விழா ஒன்றில், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்திற்கு அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதிபருக்கான தேர்லின்போது, கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க சட்டம் இயற்றப்படும் என்று ஆல்பர்டோ உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றி இருக்கிறார். கர்ப்பம் தரித்த 14 வார காலத்திற்குள், எந்த காரணத்திற்காகவும் கருக்கலைப்பு செய்துகொள்ள இந்த புதிய சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்த நடவடிக்கையால், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கி இருக்கும் மிகப்பெரிய லத்தின் அமெரிக்க நாடு என்ற பெயரை அர்ஜென்டினா பெற்றுள்ளது.