ஆப்கானிஸ்தான்: இசை கேட்டு மகிழ்வதை நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் பலி

இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த, கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் தாலிபன்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் விழாவில் பங்கேற்று இருந்த இருவர் உயிரிழந்தனர். 10 பேருக்கு மேல் காயமடைந்தனர் என அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.

தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தாலிபன் அமைப்பின் சார்பில் அதைச் செய்யவில்லை என்றும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1996 முதல் 2001ம் ஆண்டு வரை இருந்த தாலிபன்கள் ஆட்சியில் இசை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இசைக்கு அப்படிப்பட்ட எந்தவித அதிகாரபூர்வமான தடைகளும் விதிக்கப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை நாங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள சுர்க் ராட் மாவட்டத்தில் நான்கு தம்பதிகளுக்கு ஒன்றாக திருமணம் நடந்து கொண்டிருந்தது என அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் பகுதியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிக்க, உள்ளூர் தாலிபன் தலைவரிடம் அனுமதியும் பெற்றிருந்தனர்.

ஆனால் இரவு நேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்து ஒலிபெருக்கிகளை உடைக்க முயன்றனர். திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது துப்பாக்கி ஏந்திய அந்த நபர்கள் சுடத் தொடங்கினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதாக தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறினார்.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், அவர்கள் ஒரு நாட்டுப்புற பாடகரைக் கொன்றதாகவும், அவரின் இசைக் கருவிகளை அடித்து நொறுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. பல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஏற்கனவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version