பயங்கர வெடி விபத்து.. வன்முறையில் இறங்கிய மக்கள்..கலங்கும் லெபனான்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்திற்கு பொறுப்பேற்று, அந்நாட்டு அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4ம் தேதி மாலை பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த 2,750 மெட்ரிக் டன் எடையிலான அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறிய விபத்தில் அந்நகரில் 150க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 5000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். இந்த விபத்து காரணமாக அந்நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது.

இந்த கோர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முடியாமல் அரசு திண்டாடி வருகிறது. வீடுகளை இழந்துள்ள மக்கள் உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே பொருளாதார பிரச்னைகள், உள்நாட்டுப் போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வெடிவிபத்தால் வீடு, உடமைகளை இழந்து நடு வீதியில் நிற்கின்றனர்.

இந்த விபத்திற்கு அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டி, சாலைகளில் இறங்கி போராடத் துவங்கி உள்ளனர். ஏராளமானோர், நாடாளுமன்றத்திற்கு முன்னால் கூடி சாலைகளில் தீ வைத்தும் கற்களை வீசியும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் சாலைகளில் திரண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக 16 பேரிடம் அரசு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அரசு அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Exit mobile version