சீனா கேட்டுக் கொண்டதால் ஆப் ஸ்டோரில் இருந்து குரான் செயலியை நீக்கிய ஆப்பிள் நிறுவனம்! அதிர வைத்த காரணம்…

சீனாவில் உள்ளூர் அதிகாரிகளின் வேண்டுகோள் காரணமாக ஆப் ஸ்டோரில் இருந்து பிரபலமான குரான் செயலியை ஆப்பிள் நிறுவனம் நீக்கியிருக்கிறது.

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் கூறப்பட்டுள்ள தகவல்களை டிஜிட்டல் வகையில் பயனர்களுக்கு  வழங்கிவரும் செயலிகளில் ஒன்று குரான் மஜீத் (quran majeed).  உலகம் முழுவதும் 35 மில்லியனுக்கு அதிகமான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் உள்ள அதிகாரிகளின் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக அந்நாட்டில் ஆப் ஸ்டோரில் இருந்து குரான் மஜித் செயலியை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளதாக பிரபல செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மத  நூல்களை வழங்கியதால் இந்த செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் உள்ள ஆப்ஸை கண்காணிக்கும் இணையதளமான  ஆப்பிள் சென்சார்ஷிப் ( Apple Censorship) தளத்தில் இந்த நீக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்க்க சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம் என்று குரான் மஜித் செயலியை உருவாக்கியவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தங்களுக்கு 10 லட்சம் பயனர்கள் உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில்  அங்கீகரிக்கப்பட்ட மதமாக இஸ்லாம் உள்ளது. அதேவேளையில், சின்ஜியாங்கில் (Xinjiang.) உள்ள முஸ்லீம் உய்குர் (Uyghur ethnic group) இனக்குழுவின் மீது மனித உரிமை மீறல்கள்களையும் இனப்படுகொலைகளையும் சீனா நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் போலிதனமாக செயல்படுவதாக அமெரிக்க அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சிக்கும் அவர் சீனா விவகாரத்தில் மவுனம் காப்பதாகவும், சீனாவின் தணிக்கைகளுக்கு எவ்வித ஆட்சேபணையும் இன்றி உடன்படுவதாகவும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

Exit mobile version