விண்கலத்தில் உடைந்து போன கழிவறை… 20 மணி நேரம் அவதியுற்ற விண்வெளி வீரர்கள்

வான்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து அமைத்துள்ளன.

அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் அங்கு தங்கிருந்து ஆய்வு செய்து விட்டு திரும்புவார்கள். இந்த பணிகளுக்காக சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க வீராங்கனை மேகன் மெக்ஆர்தர், பிரான்ஸ் வீரர் தாமஸ் பெஸ்குவெட் உள்பட 3 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அப்போது விண்கலத்தில் இருந்த கழிவறை உடைந்தது. இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 3 விண்வெளி வீரர்களும் டயப்பர்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

இது குறித்து பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் கூறும்போது, ‘விண்வெளி பயணம் சவால்கள் நிறைந்தது. இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை’ என்றார்.

Exit mobile version