ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் பிரதமர் பதவி வகித்து வருகிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் அவர் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்துள்ளார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.
இதையொட்டி பிரதமர் சன்னா மரின் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இறுப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், அவை நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்குள் டிஜிட்டல் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.