“முதியவர்களை கொன்று விடாதீர்கள்”..இளைஞர்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை

கொரோனா குறித்த அச்சமின்றி செயல்பட்டு, வீடுகளில் உள்ள முதியவர்களை கொன்று விட வேண்டாம் என, பிரிட்டன் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், பல்வேறு தீவிர முயற்சிகளிக்குப் பிறகு நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, நாள் ஒன்றிற்கு ஆயிரத்துக்குள் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பிரிட்டன் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இது தொடர்பாக பிபிசி வானொலியில் பேசிய பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் இளைஞர்கள் மிகவும் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். அவர்களது இந்த செயல், வீட்டிலுள்ள முதியவர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இளைஞர்கள் அறிகுறி இல்லாமலே கொரானா தொற்றுக்கு ஆளாகி, அதனை முதியவர்களிடம் பரப்ப நேரிடலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பிரிட்டனில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 28 நாட்களுக்குள் மட்டும் அவர்களில் 41,554 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கைதான் என்றாலும், தொற்று எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது. ஆனாலும் அதனால் எந்தவித மனநிறைவும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version