அமெரிக்காவுக்கு மாற்று; கனடாவின் புதிய எண்ணெய்க் குழாய்!

ஃபோர்ட் மெக்மரே: அமெரிக்காவைச் சார்ந்துள்ள தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மாற்றியமைக்கும் நோக்கில், மேற்கு கடற்கரை நோக்கிய புதிய எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கான ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்த கனடா முடிவு செய்துள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னியும், ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தும் இத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இன்று அறிவித்தனர்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்

‘பசிபிக் லிங்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய்க் குழாய், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். இதன்மூலம் பல்வேறு ஒப்புதல் நடைமுறைகளுக்குப் பதிலாக, ஒருங்கிணைந்த மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு திட்டம் விரைவுபடுத்தப்படும்.

ஒப்புதல் நடைமுறையை 2027 செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய கனடா அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியேயான கனடாவின் ஏற்றுமதியை அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கும் முயற்சியின் முக்கியப் பகுதியாக இந்தத் திட்டம் அமையும் என கார்னி கூறியுள்ளார்.

நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்

ஆல்பர்ட்டா மாகாணத்திலிருந்து கனடாவின் மேற்கு கடற்கரை வரை அமைக்கப்படவுள்ள இந்தக் குழாய் வழியாக, நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு 2,000 கோடி கனடா டாலருக்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உருவாகலாம் என்றும், சுமார் 1.40 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும் கனடா அரசு கணித்துள்ளது.

திட்டத்தின் கட்டுமானச் செலவு 3,520 கோடி முதல் 4,370 கோடி கனடா டாலர் வரை இருக்கலாம் என ஆல்பர்ட்டா அரசு மதிப்பிட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான Trans Mountain Corporation நிறுவனம், Pembina Pipeline Corporation நிறுவனத்துடன் இணைந்து குழாயை அமைக்கவுள்ளது.

ஆசியச் சந்தைகளை நோக்கி

கனடாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை தற்போது அமெரிக்காவுக்கே செல்கின்றன. புதிய குழாய் அமைக்கப்பட்டால், பசிபிக் கடற்கரை வழியாக ஆசிய நாடுகளுக்கு நேரடியாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியும். இதன்மூலம் அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதி வரிகளால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் கனடா மத்திய அரசும் ஆல்பர்ட்டா அரசும் பெரும்பான்மை உரிமையாளர்களாக இருப்பார்கள். பழங்குடியின சமூகங்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத உரிமைப் பங்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்ப்புகளும் சவால்களும்

கனடாவில் இதற்கு முந்தைய எண்ணெய்க் குழாய் திட்டங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பழங்குடியின சமூகங்களின் எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளன. இதனால் சில திட்டங்கள் கைவிடப்பட்டதுடன், சிலவற்றின் கட்டுமானச் செலவும் காலதாமதமும் அதிகரித்தன. எனவே, பசிபிக் லிங்க் திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் நில உரிமை தொடர்பான ஆய்வுகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Exit mobile version