AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

பெய்ஜிங்: செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் பணியாளர்களுக்கு ஏற்படும் வேலைவாய்ப்பு பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் துறைகளைச் சீன அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலில் திறன் பயிற்சி, மாற்று வேலைவாய்ப்பு உதவி மற்றும் வேலைவாய்ப்பு அபாயங்களைக் கண்காணிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு உதவி

AI காரணமாகப் பணிகளில் மாற்றம் ஏற்படும்போது, பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் பொருத்தமான வேலைவாய்ப்புப் பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பில் அல்காரிதங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாகுபாடு, மோசடி மற்றும் தனியுரிமை மீறல்களையும் எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக் கொள்கையில் AI-க்கு முக்கியத்துவம்

தொழிலாளர்கள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவும் நடவடிக்கைகளைச் சீனா ஏற்கெனவே அறிவித்துள்ளது. AI வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக மனிதவளம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் லி ஜோங் முன்பு தெரிவித்திருந்தார்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், தரமான வேலைவாய்ப்பையும் ஆதரிக்க வேண்டும் என்பது அரசின் அணுகுமுறையாக உள்ளது. பாரம்பரியத் துறைகளிலும் AI பயன்பாடுகள் மூலம் புதிய பணிகளை உருவாக்குவது, சீனாவின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

Exit mobile version