சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்

சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

இந்த வருட தொடக்கம் முதல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சரும், அந்நாட்டு ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்தார். அத்துடன் அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின் போது இருவரும் இணைந்து கூட்டாக புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது தொடர்பாக சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ’சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி இருவர் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது சர்வதேச மற்றும் நாட்டில் நிழவும் சூழல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. மேலும், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான உறவுகள், தொழில்நுட்ப மற்றும் உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் பிற பிரச்னைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான், சீனா இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது’ என தெரிவித்துள்ளது. அந்த செய்தியில் இருநாட்டிற்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் குறித்து வெளியிடப்படவில்லை.

Exit mobile version