சீன அதிபரை விமர்சித்த வணிகர் ஒருவருக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசாக மாறாத் துடித்து கொண்டிருக்கும் சீனாவின் அதிபர் ஜி ஜிங் பிங், அந்நாட்டின் சர்வாதிகாரமிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக உள்ளார். அங்கு அவர் சொல்வது தான் சட்டம். சீன அரசையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் யார் விமர்சித்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். இதற்கு உதாரணமாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விமர்சித்த நில வணிகர் ஒருவரின் மீதான குற்றச்சாட்டுகள், தோண்டியெடுக்கப்பட்டு ஊழல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் அரசின் உறுப்பினராக இருந்தவர் ரென் சிகியாங். கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பிக்கைக்கு உரியவர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, சீன நில வணிகத்தில் ஜாம்பவனாகத் திகழ்ந்ததோடு, சீன அரசின் உதவியோடு தனது தொழிலை பல மாகாணங்களில் விரிவுபடுத்தி அதிக லாபம் ஈட்டி வந்தார்.
ஆனால், காலப்போக்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அடக்குமுறை ஆட்சியை எதிர்க்கத் தொடங்கினார். அதன்பிறகு மார்ச் மாதத்தில் அவர் திடீரென காணாமல் போக, போலீசார் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, பல ஊழல்களை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனாவைக் கையாளுவதில் அதிபர் ஜி ஜின்பிங் தோல்வி அடைந்துவிட்டார் என்று கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கிளறியது. அவர், தலைவராக இருந்த அரசு நிறுவனத்திற்கு சுமார் 128 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. அசுர கதியில் விசாரணை நடத்திய நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது. ரென் சிகியாங்குக்கு சுமார் 45.8 கோடி அபராதமும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.