இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருகின்றார்.
சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரவிய கொரானா வைரஸ் உலகம் முழுவதையும் புரட்டி எடுத்து வருகின்றன ஊரடங்கள் பல்வேறு துறைகள் முடங்கிப்போய் உள்ளன.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
இங்கு நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த வைரஸ் பாதிப்பு 9 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 274 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மொத்த பலி 46 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து உள்ளதால் நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே லண்டனில் வெளியாகும் ‘தி டைம்ஸ் ஆப் லண்டன் நாளேடு’ வெளியிட்ட செய்தியில், “வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் ஒரு மாதம் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் புதிய ஊரடங்கில் அத்தியாவசியமில்லாத பணிகள், கடைகள், அனைத்தும் மூடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் முழு ஊரடங்கு குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது