கொரோனா பற்றி கவலைப்படாமல் மக்களை வெளியே வர சொன்னவருக்கு கொரோனா !

‘வீட்டில் தனித்திருக்க முடியவில்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும்’ எனக்கூறி பரிசோதனை செய்து கொண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் 40 ஆயித்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை, 19.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.


இந்நிலையில், கடந்த 7ம் தேதி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.’நான் நலமுடன் இருக்கிறேன். காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தனித்திருக்க முடியவில்லை’ எனக்கூறிய போல்சனோரா, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.

‘கொரோனாவைப் பற்றி மக்கள் கவலைப்படக் கூடாது. முகக்கவசம் அணியத் தேவையில்லை. மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்’ என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார். இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘ஜெய்ர் போல்சனோராவின் அலட்சியமே பிரேசிலில் கொரோனாவால் அதிகப்படியான பாதிப்பு ஏற்படக் காரணம்’ என, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Exit mobile version