கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்காலத்திலும் நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகையே கடந்த எட்டு மாதங்களாக முடக்கிப் போட்டுள்ளது கொரோனா. இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிய , சுமார் 150 க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் முதல் பயன்பாட்டை 2021ஆம் ஆண்டின் தொடக்கம் வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் கூறியது.
கொரோனா தொற்றுநோயால் உலகளவில் 1,77,66,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,83,218 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனாவால் மக்களின் வாழ்க்கை முறையே தலைகீழாக மாறிவிட்டது.
கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை, பாதிப்பு குறைந்து வருகிறது, விரைவில் தடுப்பு மருந்து சந்தைக்கு வந்துவிடும் என ஆறுதல் வார்த்தைகளை அரசுகள் கூறி வந்தாலும்
உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் ஒரு வகையான பேரழிவு என்றும் இதன் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் நீடிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவர், ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளும் தற்போது உயர்வை சந்தித்து வருகின்றன என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் பற்றிய புரிதல் தற்போது அதிகரித்திருந்தாலும், பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை, மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர் என்று டெட்ரோஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.