ரஷியாவில் 14 வயது சிறுமி ஒருவர், தான் பெற்றெடுத்த குழந்தையை பெற்றோருக்கு பயந்ததால் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்தப் போது, அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
ரஷியாவின் சைபீரியாவில் உள்ள வெர்க்-துலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி அனஸ்தேசியா குலேஷோவா. இவருக்கு வயது 14. இவரது காதலனுக்கு 16 வயது. கொரோனா ஊரடங்கு விடுமுறையின்போது, இவர்கள் இருவரும் காதலை முறித்துக்கொண்டுள்ளனர்.
அனஸ்தேசியா சில மாதங்களுக்கு முன் தன் வயிறு பெரிதாகிக்கொண்டே வருவதை கவனித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த சிறுமி, தனது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் என்பதால், அவர்களிடம் சொல்லப் பயந்திருக்கிறாள். இதுக்குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுமியின் தாயாரிடம் கேட்டபோதும், சிறுமி வீட்டிலேயே இருப்பதால் அவளது எடை கூடியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
திடீரென பிரசவ வலி வரவே, என்ன செய்வதென்று அறியாத சிறுமி, யாருக்கும் தெரியாமல் ஆளில்லாத இடத்திற்குச் சென்று, அங்கு தாமாகவே குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். பின்பு வீட்டிற்கு வந்தபோது, தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த அப்பாவை பார்த்ததும் பயந்துள்ளாள். உடனே, குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு சென்றுள்ளாள். பின்பு அவர்களுக்கு சொந்தமான கேரேஜ் ஒன்றிலுள்ள ஒரு ஃப்ரீசர் பாக்ஸில் குழந்தையை வைத்து மூடி உள்ளார் சிறுமி, அனஸ்தேசியா.
குழந்தைப் பிறந்தப் பிறகு, அந்த சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதைக் கவனித்த சிறுமியின் தாயார், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்களிடம், தான் கர்ப்பமாக இருந்த விஷயத்தையும், குழந்தையையும் பெற்றெடுத்ததையும் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள், குழந்தையை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது குழந்தையை ஃப்ரீசரில் வைத்திருப்பதை கூறியிருக்கிறார். உடனே குழந்தையை காப்பாற்ற முயன்றவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையை ஃப்ரீசரில் வைத்து நீண்ட நேரம் ஆனதால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது.
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி அனஸ்தேசியாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.