உலகம் முழுவதும் இன்று காலை ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் முடங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை நீடித்து வருவதாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் உலகளவில் இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்வதால், காலை நேரத்தில் முக்கிய வேலைகளை செய்ய முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தனர். ஆனால், சிலர் தங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்றும் பதிவிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து சமூக வலைதலங்களில் இந்த தகவல் டிரண்ட் ஆனது.
ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவ் பிரச்னை இருப்பதுப் பற்றி, கூகுள் நிறுவனத்துக்கும் புகார் சென்றுள்ளது. இந்தப் பிரச்னைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பலர் தங்களுக்கு புதிய மின்னஞ்சல்கள் வருவதில்லை என்றும், பலர் தங்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளனர். ஜிமெயிலில் எந்த ஒரு இணைப்பையும் இணைக்க முடியவில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர்.
சில ஐ.டி. வல்லுநர்கள், கூகுள் ஆப்ஸ் பக்கத்தில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்தே, இந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கு பதில் அளித்திருந்த ஜி சூட் நிறுவனம், ”இதுகுறித்து சிக்கல்களை ஆராய்ந்து வருகிறோம், இதுகுறித்த தகவலையும், எப்போது சரி செய்யப்படும் என்ற தகவலையும் தெரிவிப்போம்” என்று தெரிவித்துள்ளது. “Service interruptionஅல்லது service outage” பிரச்சனையாக இருக்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினை இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளது.இதற்கிடையில், பயனர்கள் ஜிமெயிலில் வேலை செய்ய முடியாததால், #Gmaildown என்ற ஹேஷ்டேக்குகளில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.இது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.