ஏலம் எடுக்கப்பட்ட ஆடு…எவ்வளவு கோடி தெரியுமா!!

ஸ்காட்லாந்தில் ஆடு ஒன்று, சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகித்திலேயே மிக உயர்ந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடு என்றப் பெருமையைப் பெற்றுள்ளது.

ஸ்காட்லாந்தில் நாட்டின் லானார்க்கில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. ஸ்காட்டிஷ் தேசியச் சந்தை நடத்தி வரும் இந்தச் சந்தையில் ஏலம் விடுபடும் ஆடுகளை, அதன் எடை, கொழுமை மற்றும் பல்வேறு காரணிகள் கொண்டு, மக்களும், வியாபாரிகளும் வாங்கி செல்வார்கள். 

இந்தச் சந்தையில் இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆறு மாத வயதுடைய டெக்செல் வகை செம்மறி ஆடு ஏலத்தில் விடப்பட்டது. அந்த ஆட்டின் பெயர் “டபுள் டைமண்ட்” என்பதாகும். இந்த ஆட்டை, பிரபல ஆடு வளர்ப்பாளரான சார்லி போடன் விற்றுள்ளார். இந்த ஆட்டுக்குட்டியை மூன்று வியாபாரிகள் சேர்ந்து, இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.

இதன் மூலம் உலகிலேயே “டபுள் டைமண்ட்” ஆடுதான், அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆடு என்ற சாதனையை படைத்துள்ளது. இதுக்குறித்து, ஆட்டை ஏலம் எடுத்தவர்கள் கூறும்போது, ஆடு இனப்பெருக்கும் செய்வதன் மூலம், நாங்கள் ஆட்டிற்காக செலவழித்தப் பணத்தை திரும்பப் பெற்றுவிடுவோம், என நம்பிக்கையுடன் கூறுகின்றனர். 

ஏலத்தில் எடுக்கப்பட்ட டெக்செல் வகை செம்மறி ஆடுகள், நெதர்லாந்தில் உள்ள ஒரு சிறிய தீவில், அதிகளவில் காணப்படுவதாகவும், இவ்வகை ஆடுகள் அதிகப்படியான விலைக்கு விற்கப்படுவதாகவும், சந்தையில் பங்கேற்ற வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2009-ஆம் ஆண்டில், சுமார் 2 கோடி ரூபாய்க்கு, ஆடு ஒன்று ஏலத்தில் எடுக்கப்பட்டதே சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த சாதனையை “டபுள் டைமண்ட்” ஆடு முறியடித்துள்ளது.

Exit mobile version