கின்னஸ் சாதனைக்கு என்று எந்த வரையறையும் கிடையாது. தனித்துவமான வித்தியாசமான எல்லா சாதனைகளும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறுவது வழக்கம். மனிதர்கள் மட்டுமின்றி நாய்கள் போன்ற செல்ல பிராணிகள் செய்யும் வித்தியாசமான செயல்களும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஒருவர் பப்புக்கு கொண்டாட செல்வதை சாதனையாக செய்து இருக்கிறார்.
மாட் எல்லிஸ் என்ற பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர். மாட் எல்லிஸ் மது குடிக்கும் பப்புகளுக்கு சென்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அவர் கிட்டத்தட்ட 9 மணி நேரத்தில் 51 மதுக்கடைகளுக்குச் சென்று குடித்து ஒரு புதிய “உலக சாதனை” படைத்துள்ளார். மாட் எல்லிஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க ஒவ்வொரு பப்பிலும் குறைந்தது 125 மில்லி குடிக்க வேண்டும். அதன்படியே குடித்தும் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் மதுவுடன் கலந்து குடித்ததில் பெரும்பாலும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் டயட் கோக் ஆகியவை அடங்கும். இந்த சாதனைக்காக மேற்கொண்ட பயணத்தில் 6.3 லிட்டர் மது மற்றும் குளிர்பானம் குடித்துள்ளார். மது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மாட் எல்லிஸ் எல்லா வகையான மதுக்கடைகளுக்கும் செல்பவர் ஆவார். நிறைய இடங்களுக்கு செல்வது பிடிக்கும் என்பதால், இதனையே ஒரு சாதனையாக செய்தால் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
அதன்படியே ஆசையை நிறைவேற்றியும் உள்ளார். இந்த சாதனை பதிவை கின்னஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தாரா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2011ம் ஆண்டில் 13 பேர் கொண்ட குழு 24 மணி நேரத்தில் 250 பார்களில் குடித்தார்கள். கின்னஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மாட் எல்லிஸின் சாதனையை அங்கீகரித்தால், இந்த சாதனையை செய்த முதல் நபர் என்ற பெயர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.