மஸ்கட்: ஓமன் கடற்கரைக்கு அருகே ‘எம்டி பெட்ரோ டால்பின்’ எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, அதில் இருந்த ஒன்பது இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளனர். காணாமல் போன மேலும் இரண்டு இந்திய மாலுமிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நிகரகுவா நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் 11 இந்திய மாலுமிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கடலோரக் காவல் படையுடன் ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியத் தூதரகம் ஒருங்கிணைப்பு
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அக்டோபர் 11ஆம் தேதி இந்தியர்கள் பணியாற்றிய வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம், ஓமன் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நிர்வாகங்களுடன் தொடர்பில் இருந்து, காணாமல் போன இந்தியர்களை மீட்கவும் மற்ற மாலுமிகளுக்கு உதவவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தாக்குதலுக்குள்ளான மற்றொரு கப்பலான ‘எம்டி வால்தெரா’வில் இருந்த 11 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்துக்கு வலியுறுத்தல்
வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், பிராந்தியப் பதற்றத்தைத் தணிக்கவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் சுதந்திரமான, பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்து உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
