அடுத்த மாத பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு

இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் 12-வது உச்சி மாநாடு அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி நடக்கிறது.

இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கிழக்கு லடாக்கில் இருநாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் முதல் முறையாக நிகழும் இந்த சந்திப்பின்போது, இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களா என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.

‘உலகளாவிய ஸ்திரத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சிக்கான பிரிக்ஸ் ஒத்துழைப்பு’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். பிரிக்ஸ் அமைப்பின் முக்கியமான 3 தூண்களான அமைதியும்- பாதுகாப்பும், பொருளாதாரமும்-நிதியும், கலாச்சாரமும்- மக்களுக்கு இடையேயான உறவுகளும் என்ற துறைகளில் 5 நாடுகளும் இந்த ஆண்டு உறவுகளை தொடர்ந்ததாக பிரிக்ஸ் அமைப்பு கூறியுள்ளது

இதுகுறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் ஆன்டன் கோப்யகோவ் மேலும் கூறுகையில், ‘கொரோனா தொற்றால் சர்வதேச சூழல் கடினமாக இருந்தபோதும், பிரிக்ஸ் அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜனவரி முதல் 60-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

Exit mobile version