அமெரிக்காவில் இந்திய நர்ஸ் கணவரால் குத்திக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில், கேரளாவைச் சேர்ந்த 26 வயது நர்ஸ், கணவரால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய்.26 வயதான இவர், அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள “ப்ரோவர்ட் ஹெல்த் கோரல் ஸ்பிரிங்ஸ்” மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு மற்றும் காரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் பிலிப்மேத்யூ (34) என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிராட் பிகொவொன் கூறுகையில், மெரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, பிலிப்மேத்யூ அவரை இழுத்து பல முறை கத்தியால் குத்தி உள்ளார். மேலும், மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் பிலிப்மேத்யூ தனது காரை மெரின் மீது ஏற்றியுள்ளார்.அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என கூறினார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் மெரின்  மற்றும் அவரின் தாய், குழந்தையை பிலிப்பை பார்க்கவே விடவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பிலிப் தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும், கடந்த திங்கட்கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள் என்று ஜாய் , பிலிப்பிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை, ஆத்திரத்தில் குத்திவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version