இங்கிலாந்தில், இந்திய இளவரசர் விக்டர் ஆல்பர்ட் ஜே துலீப் சிங் வாழ்ந்த மாளிகை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.152 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆட்சி செய்த மன்னர், மகாராஜா ரஞ்சித் சிங். இவரின் இளைய மகன் துலீப் சிங். இவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன், சீக்கிய பேரரசின் கடைசி மன்னராக இருந்தவர் ஆவார்.
பிரிட்டிஷ், ஆட்சியைக் கைப்பற்றிய உடன், துலீப் சிங் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். 1866-ஆம் ஆண்டு, அங்கு அவருக்கு இளவரசர் விக்டர் ஆல்பர்ட் ஜே துலீப் சிங் பிறந்தார். இளவரசர் விக்டர், அழகான மற்றும் துணிச்சலான இளவரசராவார்.
இளவரசர் விக்டர், 1898-ஆம் ஆண்டு ஆங்கிலேய சமுதாயத்தைச் சேர்ந்த லேடி அன்னே கோவென்ட்ரியை திருமணம் செய்துக் கொண்டார். கலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினருக்கு, இங்கிலாந்து அரசின் சார்பில், லண்டன் லிட்டில் கோல்டன் பகுதியில் ஒரு பிரமாண்டமான மாளிகை வழங்கப்பட்டது.
ஆனால், சூதாட்டம், குதிரைப் பந்தயம் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தக் காரணத்தால், தனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார், இளவரசர் விக்டர்.
இதைத்தொடர்ந்து, 1902-ஆம் ஆண்டில் அவர் திவாலாக அறிவிக்கப்பட்டதும், லண்டனில் உள்ள அவரது ஆடம்பர மாளிகையை, அரசுக் கைப்பற்றியது. ஆனால் இறுதியில் அந்த மாளிகை தனியார் வசம் சென்றது.
இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அனைத்தும் நவீன மயமாக்கப்பட்ட நிலையில், அண்மையில் விற்பனைக்கென்று அறிவிக்கப்பட்டது. இந்த அழகான மாளிகையை வாங்குவதற்கு பலரும் போட்டியிட்டனர். இறுதியில் தற்போது 15.5 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.152 கோடி), இந்த மாளிகை விற்பனையாகியுள்ளது.