இந்தோனேசிய சிறையில் தீ விபத்து – பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

இந்தோனேசிய சிறைச்சாலையொன்றில் கடந்த செப்-8 (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 கைதிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியான டாங்கெராங் பகுதிச் சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. 19 செல்களைக் கொண்ட அந்தச் சிறைச்சாலையின் சி2 பகுதியில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி2 பகுதியில் மட்டும் 122 குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த தீவிபத்தில் 44 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர்கள்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததும், சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர் என்று செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version