லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்த்தை தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4ம் தேதி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனிடையே, விபத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வன்முறை வெடித்ததால், போலீசார் தடியடி நடத்தி போராட்டகாரர்களை கலைத்தனர். தொடர்ந்து, அரசுக்கு கடும் திர்ப்புகள் எழுந்த நிலையில், 3 அமைச்சர்களே அரசின் மீது நம்பிக்கை இல்லை என பதவி விலகினர்.
இந்நிலையில், நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் ஹசன் தியாப், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனக்கு முன்பாக இருந்த ஊழல் அரசியல்வாதிகளே வெடி விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியவர், லெபனான் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என தெரிவித்தார்.