பாக்கிஸ்தான் அரசு, நவாஸ் ஷெரீப்பை ‘தலைமறைவு குற்றவாளி’ என, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப் இவர் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கி கடந்த ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.
இதனையடுத்து அவர், மருத்துவ சிகிச்சைக்கு லண்டன் செல்ல விண்ணப்பித்தார். அதற்கு, லாகூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி அவர் லண்டன் சென்று, இதயநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், லண்டன் வீதியில், நவாஸ் ஷெரீப், தன் மகனுடன் குடை பிடித்தபடி நடந்து செல்லும் படம், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை பெரும் ஏற்படுத்தியது. இதனால், ஆத்திரம் அடைந்த பாக்கிஸ்தான் அரசு, நவாஸ் ஷெரீப்பை ‘தலைமறைவு குற்றவாளி’ என, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து, பாக்கிஸ்தான் பிரதமரின் ஆலோசகர், ஷாசாத் அக்பர் கூறியதாவது: நவாஸ் ஷெரீப்பிற்கு, மருத்துவ சிகிச்சைக்காக அளித்த, நான்கு வார, ‘பரோல்’, கடந்த ஆண்டு, டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. கடந்த மாதம், அவர் சார்பில், லாகூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கொரோனா அச்சம் காரணமாக, பாக்கிஸ்தான், திரும்ப வேண்டாம்’ என, மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் நலமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதனால், நவாஸ் ஷெரீப் லண்டனில் தலைமறைவாக உள்ளதாக, அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், லண்டனில் உள்ள அவரை, நாடு கடத்துமாறு, பிரிட்டன் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, தேசிய பொறுப்புடமை அமைப்பை, அரசு கேட்டுக் கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.