கொரோனா வைரசின் பலமான 2வது அலை.. பொதுத்தேர்தலை ஒத்திவைத்த நியூசிலாந்து

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்திய நாடக நியூசிலாந்து இருந்தது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தியதற்காக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகளும் குவிந்தன.

நோய்த்தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 102 நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லந்தில் 49 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, 12 நாட்களுக்கு ஆக்லந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று அச்சத்தால், அந்நாட்டில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல், அக்டோபர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை கைவிட்டதை அடுத்து, தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். 120 உறுப்பினர்களை கொண்ட நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version