“தாவுத் இப்ராஹிம் எங்க நாட்ல தான் இருக்காரு” – பாகிஸ்தான் அறிக்கை

இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தான் வசிக்கிறார் என்பதை ஒருவழியாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத குழுக்களின் பட்டியலை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஹிஃபீஸ் சையது, மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் ஆகியோரை சேர்த்துள்ளதோடு, அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கும், வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த பட்டியலின்படி, கராச்சியில் உள்ள கிளிஃப்டன் என்ற பகுதியில் சவுதி மசூதிக்கு அருகில் உள்ள சொகுசு இல்லம் தான் தாவூத் இப்ராஹிமின் வீட்டு முகவரி என குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் தாவுத்தின் மற்ற சொத்துக்களின் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கராச்சியின் நூராபாத்தில் ஒரு சொகுசு வீடும் அவருக்கு உள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் அதிகம் தேடப்படும் நபரான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வாழ்கிறார் என்றும், அவருக்கு அந்நாட்டு அரசு உதவி வருவதாகவும் இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. ஐ.நா.-வும் இந்தியாவின் கருத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் தான் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் வீட்டு முகவரி குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

பாரிஸை தலைமையிடமாக கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) 2018 ஜூன் மாதத்தில்,தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்தது
2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதை நிறுத்தா விட்டால், பாகிஸ்தானுக்கு முழுமையாக தடை விதிக்கப்படும் என கூறியது. முழுமையாக தடை விதிக்கப்பட்டால், பாகிஸ்தானால், எந்த நாட்டில் இருந்தும் நிதி உதவி பெற முடியாது. இதனிடையே, ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக தற்காலிக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மும்பையின் நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிம் பல்வேறு சட்ட விரோத தொழில்களை நடத்தி வந்தவர். இவர் மீது தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது, பண மோசடி, மற்றும் மிரட்டி பணம் பறித்தல், அல் கய்தா, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. 257 பேரின் உயிரை பறித்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவரும் இவர் தான். அதன்பிறகு அவர் இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version