தடுப்பூசி குறித்து வதந்தி… போலியோ தடுப்பு முகாமில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில், போலியோ தடுப்பூசி முகாமில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பன்க்துன்க்வா மாகாணத்தில் தால் பெஷாடி என்ற கிராமத்தில் போலியோ தடுப்பூசி முகாம் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதில் மூன்றாவது நாளான நேற்று, தடுப்பு மருத்துவ ஊழியர்களுடன் பாதுகாப்பிற்காக சென்ற போலீஸ்காரரை, ‘மோட்டார் பைக்’கில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். தகவல் அறிந்து போலீஸ் படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

உலக அளவில் பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே போலியோ நோய் உள்ளது. இந்தியா உட்பட மற்ற அனைத்து நாடுகளும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்து விட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் முழுதும் போலியோ தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் போலியோ தடுப்பு முகாமில் பணியாற்றும் ஊழியர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

போலிஸ்காரர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அந்நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.போலியோ தடுப்பூசியால் கருவுறுதல் தடுக்கப்படுகிறது என, சில பயங்கரவாத அமைப்புகள் பிரசாரம் செய்வதோடு, மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதலும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version