கொரோனா தடுப்பூசி போட்டால் பெண்களுக்கு தாடி வளரும் : பிரேசில் அதிபரின் பீதி பேச்சு

கொரோனா தடுப்பூசி போட்டால் பெண்களுக்கு தாடி வளரும் என பிரேசில் அதிபரின் பீதி பேச்சு.

பிரேசில்:

கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மனிதர்கள் முதலையாகவும் மாறலாம்; பெண்களுக்கு தாடி வளரலாம்; ஆண்கள் குரல் பெண்களைப் போலவும் மாறலாம்; இதற்கு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் பொறுப்பாகாது என பிரேசில் அதிபர் போல்சனாரோ பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது பிரேசில். இந்த நாட்டில் இதுவரை மொத்தம் 72,13,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்களில் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில் உள்ளது. உலக நாடுகளைப் போல பிரேசில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, கொள்முதலில் தீவிரமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும் பிரேசில் தொடங்கி உள்ளது.

பிரேசில் அதிபர் போல்சனாரோ, கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்துடன் பிரேசிலும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேசிய போல்சனாரோ, ஃபைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மனிதர்கள் முதலையாகவோ, பெண்களுக்கு தாடி வளர்ந்தாலோ, ஆண்களின் குரல் பெண்களை போல மாறினாலோ ஃபைசர் நிறுவனம் பொறுப்பாகாதாம். ஆகையால் கொரோனா தடுப்பூசி போடுவது உங்கள் விருப்பம். நான் இந்த தடுப்பூசியை போடமாட்டேன் என பேசியிருக்கிறார். போல்சனாரோவின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

Exit mobile version