கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உதவலாமே?.. இந்தியாவிற்கு ரஷ்யா அழைப்பு

தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியின் உற்பத்திக்காக, இந்தியாவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மாஸ்கோ ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகம், கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் இணைந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த மருந்தை தனது மகளுக்கும் செலுத்தி உள்ளதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்தார். அவர்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்திற்கு ஸ்பூட்னிக் – வி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் 3வது கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது. அதற்கான முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

இந்தநிலையில் அதிக அளவிலான மருந்து உற்பத்திக்காக இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் – வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக அந்நாட்டின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள டிமிட்ரிவ்: லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி கொள்முதலில் ஆர்வம் காட்டி வருகின்றன. தேவைக்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது.  இந்த சுழலில் நாங்கள் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பாக்கிறோம்.  தடுப்பூசியை அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும்.  இதில் சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம், முறைப்படியான மூன்றாம் கட்ட பரிசோதனையின் ஆய்வு முடிவுகள் கிடைத்ததும் இதுதொடர்பாக முடிவு எடுக்கலாம் என இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version