அகதிகள் கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து : 45 பேர் உயிரிழப்பு, 37 பேர் மீட்பு

லிபியா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர், 37 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

லிபிய கடல் எல்லையில் ஸ்வாரா கடற்கரையில், லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடிப் பயணித்தப் போது, கப்பலின் இயந்திரம் வெடித்ததில் ஐந்து குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) மற்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் (யு.என்.எச்.சி.ஆர்) ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் எனவும், விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் செனகல், மாலி, சாட் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதற்கென தனியான தேடுதல் மற்றும் மீட்பு குழு இல்லாவிட்டால், மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் என்றும் இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பெரும்பாலும் குடியேறியவர்கள் பாதுகாப்பற்ற ரப்பர் படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதுவும் இதுபோன்ற விபத்துக்களுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

2014 முதல் இதுவரையிலும் புலம்பெயர்ந்தோரின் இறப்பு எண்ணிக்கை 20,000-த்தை கடந்துவிட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. மேலும், இதுவரையில் லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300-க்கும் மேற்பட்ட அகதிகள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Exit mobile version