கணவனை துண்டு துண்டாக்கி உப்புக் கண்டம் போட்ட மனைவி..கொடுமைகார கணவனுக்கு நேர்ந்த அவலம்

ரஷ்யாவில் போதைக்கு அடிமையாகி கொடுமைப்படுத்திய கணவனை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி உப்பு போட்டு பிரிட்ஜில் பதப்படுத்ததிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் யுஷ்கோ. பிரபல பாப் இசை பாடகரான அவருக்கென அந்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குகா எனும் பெண்ணை திருமணம் செய்த அவருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், போதை பழக்கம் கொண்டிருந்த அலெக்சாண்டர் லாக்டவுன் நேரத்திலும் தினமும் குடித்துவிட்டு வந்து குகாவுடன் சண்டை போட்டதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தினமும் இதே சூழல் நிலவுவதால் ஆத்திரமடைந்த குகா கணவனை கொன்றுவிட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து அலெக்ஸ்சாண்டரை, தனது 2 வயது குழந்தையின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து, விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, ரம்பம் மற்றும் சுத்தியல் போன்றவற்றை பயன்படுத்தி கணவனின் உடலை துண்டு துண்டாக்கியுள்ளார். வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியவர், பிறகு அவைகளை வெளியே எடுத்து அவற்றின் மீது உப்பை தேய்த்து ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துள்ளார்.

இதையடுத்து, வீட்டை மொத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம்செய்துவிட்டு, வழக்கமான வேலையை பார்க்க தொடங்கியுள்ளார். இதனிடையே, அலெக்சாண்டரின் நண்பர்கள் அடிக்கடி போன் செய்து குகாவிடம் அவரது கணவரை பற்றி விசாரித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு குகா சரியாக பதில் அளிக்காமல் அவர்களது செல்போன் அழைப்புகளை தவிர்த்து உள்ளார். இதனால் சந்தேகமடைந்த அலெக்சாண்டரின் நண்பர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, குகாவின் வீட்டிற்கு சென்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணவனை கொன்று உப்பு போட்டு பிரிட்ஜில் பதப்படுத்தி இருப்பதை கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, பிரிட்ஜில் இருந்த அலெக்சாண்டரின் உடற்பாகங்களை கைப்பற்றிய போலீசார் குகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version