யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் : துணைவேந்தர் சற்குணராஜா உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் என்று சற்குணராஜா உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம்:

இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை ராஜபக்சே சகோதர்களின் உத்தரவால் கடந்த 8 ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. இந்த நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்று இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் இலங்கை யாழ்ப்பாணத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில், இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு போலீசார் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினர்.

Read more – 20 லட்சம் பரிசுத்தொகைக்காக போலி என்கவுன்ட்டர் : ஜம்மு- காஷ்மீரில் அரங்கேறிய கொடூரம்

இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது மாணவர்களின் கோரிக்கை ஏற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று உறுதியளித்து, முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர்.

Exit mobile version