நீண்ட தூரம் பயணித்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் சிரமம் குறையும்; லடாக் மக்களுக்கு உள்ளூரிலேயே நீதிச் சேவை
லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வை அமைப்பதற்கான புதிய ஒழுங்குமுறையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட பிறகும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றமே செயல்பட்டு வருகிறது. இதனால் லடாக்கைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற வழக்குகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இந்த நிலையில் லடாக்கிலேயே உயர்நீதிமன்ற அமர்வை ஏற்படுத்துவதற்கான சட்டரீதியான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின்படி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, லடாக்கில் செயல்படும் அமர்வுக்கான நீதிபதிகளை நியமிக்க முடியும்.
இதன்மூலம் லடாக்கைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பு எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக்கின் புவியியல் அமைப்பு மற்றும் நீண்ட தூரப் பயணச் சிரமங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த நடவடிக்கை அப்பகுதியின் நீதித்துறை அணுகலை மேம்படுத்தும் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
