ராட்சத பட்டத்தோடு வானில் பறந்த 3 வயது சிறுமி… பின்பு நடந்த அதிசயம்!!!

தைவானில் பட்டம் விடும் திருவிழாவின் போது, பட்டத்தோடு சேர்ந்து 3 வயது சிறுமியும் வானத்தில் பறந்து சென்றக் காட்சி, அங்கிருந்த அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. பின்பு அந்த சிறுமி பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தைவான் நாட்டில், பட்டம் பறக்க விடும் திருவிழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், தைவானின் நான்லியாவ் கடற்கரையில், இந்த ஆண்டிற்கான பட்டம் விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் விதவிதமான, பல உருவங்களில், அதுவும் பெரிய பெரிய அளவிலான பட்டங்கள் வானில் பறக்கவிடப்படும். இதைக் காண்பதற்காகவே உலகெங்கிலும் இருந்து மக்கள் வந்துக் கூடுவர்.

இந்த முறையும், பட்டம் விடும் திருவிழா படு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்ப்பதற்காகவே ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர். அப்போது, ஒரு மிகப்பெரிய பட்டத்தைப் பறக்கவிடுவதற்காக, அங்கிருந்த சிலர் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பட்டத்தின் வாலை, 3 வயது சிறுமி ஒருவர் பிடித்திருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. இந்நிலையில், அவர்கள் பட்டத்தை பறக்கவிட்டதும், பட்டத்தின் வாலை பிடித்திருந்த 3 வயது சிறுமியும்,பட்டத்துடன் மேலே பறக்க ஆரம்பித்தாள்.

இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் சத்தமிட ஆரம்பித்தனர். ஆனாலும், குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதற்குள்ளாக, பல அடி உயரத்திற்கு பட்டம் சென்றுவிட்டது.

அப்போது திடீரென்று வீசிய காற்றின் வேகத்தால், பட்டம் பூமியை நோக்கி வர ஆரம்பித்தது. ஆனால், வீசியக் காற்றின் வேகத்திலும், சிறுமி பட்டத்தின் வாலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

உடனே அங்கிருந்தவர்கள் சுதாரித்து, சிறுமியை தாவிப் பிடித்து, லாவகமாக மீட்டனர். இந்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் எடுத்துள்ளார். இந்தக் காட்சிப் பார்க்கவே, மிகவும் பதைப்பதைக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version