கடலில் அடுத்தடுத்து தாக்குதல்; 11 இந்திய மாலுமிகள் காயம்!

புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் கருங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் மொத்தம் 11 இந்திய மாலுமிகள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல்

பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற ‘எம்டி ஆன் பீஸ்’ (MT On Peace) என்ற வணிகக் கப்பல், ஓமன் கடற்பகுதிக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றபோது வெடிபொருளால் தாக்கப்பட்டது.

கப்பலில் மொத்தம் 19 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் இந்தியர்கள். இந்தத் தாக்குதலில் 12 மாலுமிகள் காயமடைந்த நிலையில், அவர்களில் 11 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஓமன் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்த மாலுமிகள் கப்பலிலிருந்து மீட்கப்பட்டு, கசாப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருங்கடலிலும் தாக்குதல்

இதற்கிடையே, கருங்கடலில் சென்ற ‘எம்வி ரோயாட் மம்மடோவ்’ (MV Royad Mammadov) என்ற வணிகக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு மாலுமிகள் இருவர் உயிரிழந்ததுடன், இந்தியர் ஒருவர் உட்பட சிலர் காயமடைந்தனர்.

அந்தக் கப்பலில் மூன்று இந்தியர்கள் பணியாற்றியதாகவும், மூவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இந்திய மாலுமிக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களை விரைந்து மீட்ட ருமேனிய அதிகாரிகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியா கடும் கண்டனம்

வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் ஆழ்ந்த கவலை அளிப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

“வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டமைப்புகளைக் குறிவைப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச நீர்வழிகளில் கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் விரைவில் மீண்டும் சீராக வேண்டும்” என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version