ஏப்ரல் 21 ஆம் தேதி ராணி எலிசபெத் தனது 95 வயதை தொட்டிருக்கிறார். அவரது கணவர் பிலிப் சமிபத்தில் இறந்ததால், அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் களை இழந்து போனது. அவருக்கு ஆண்டுக்கு இரு முறை பிறந்தநாள் கொண்டாடப்படும் என்ற ஆச்சரிய தகவல் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார். இந்த நாளில் தான் அவர் தனது உண்மையான பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அவருக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இரண்டாவது சனிக்கிழமை பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தனது உண்மையான பிறந்தநாளை குடும்பத்துடன் மட்டும் கொண்டாடும் ராணிக்கு, அன்றைய தினம் வின்ட்சர் கிரேட் பூங்காவில் 21 துப்பாக்கி வணக்கம் மற்றும் லண்டன் கோபுரத்தில் 62 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்படும்.
ஆனால் அவரது அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் அன்று, நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் களை கட்டும். பிரிட்டிஷ் மன்னர்களின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 260 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூன் இரண்டாவது சனிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில், 1400க்கும் மேற்பட்ட வீரர்கள், 200 குதிரைகள் மற்றும் 400 இசைக்கலைஞகள் அணிவகுப்பு நடத்துவர். இது பக்கிங்ஹாம் அரண்மனையில் துவங்கி, டவுனிங் தெரு வரை சென்று, மீண்டும் அரண்மனைக்கே திரும்பும்.
பின் அரண்மனையின் பால்கனியில் இருந்து மக்களின் வாழ்த்துக்களை, ராணி பெற்றுக் கொள்வார். அக்டோபரில் பிறந்த இரண்டாம் ஜார்ஜ் மன்னரால் இந்த வழக்கம் தொடங்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ராஜாக்களின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கட்டாயம் கொண்டாடப்பட வேண்டும் என்பது ராயல் விதிமுறை ஆகும்.
ராணியின் உண்மையான பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்பு தான் அவரது கணவர் இறந்தார் என்பதால், ராணிக்கு துப்பாக்கி வணக்கம் எதுவும் செலுத்தப்படவில்லை.