அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனின் பயோன்டெக் நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு, மக்கள் பயன்பாட்டிற்கான அனுமதியை இங்கிலாந்து அரசு வழங்கி உள்ளது.
உலக அளவில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ள, கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல்வேறு உலக நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. பல நாடுகளின் மருந்துகள் 3ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், ஜெர்மன் நாட்டின் பயோன்டெக் நிறுவனத்துடன் சேர்ந்து கொரொனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதன் 3 கட்ட மருத்துவ சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், அந்த தடுப்பூசியை தனது நாட்டு மக்கள் பயனுபடுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, 4 கோடி பைசர் தடுப்பூசிகளுக்கு இங்கிலாந்து அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த 4 கோடி தடுப்பூசிகளும் ஓரிரு தினங்களில் இங்கிலாந்தை சென்றடைய உள்ளது. தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசரின் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஷில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பதால், ஆசிய நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், 2 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் பிரிட்ஜுகளில் வைத்து, பைசர் தடுப்பூசியை 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதை பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்காது என நம்பப்படுகிறது.
முதற்கட்டமாக வீடுகளை விட்டு வெளியே வந்து தடுப்பூசி போட முடியாதவர்களுக்கும், அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் தடுப்பூசியை செலுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. அவர்களை தொடர்ந்து, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை வழங்கியதன் மூலம், கொரோனா தடுப்பூசிக்கு உரிமம் வழங்கிய முதலாவது மேற்கத்திய நாடாக இங்கிலாந்து பார்க்கப்படுகிறது. அவசர கால பயன்பாட்டிற்காக விண்ணப்பித்து இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பைசரின் தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.