கீவ்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட FP-7 தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் முதல்முறையாகப் போரில் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
“உக்ரைனின் FP-7 தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணை முதல்முறையாகப் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிடைத்த முடிவுக்கு நன்றி. அடுத்தது உற்பத்தி” என ஜெலென்ஸ்கி தனது Telegram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலக்கு குறித்த தகவல் இல்லை
FP-7 ஏவுகணை எங்கு பயன்படுத்தப்பட்டது, எந்த இலக்கைத் தாக்கியது, தாக்குதலால் ஏற்பட்ட சேதம் என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை ஜெலென்ஸ்கி வெளியிடவில்லை. எனவே, இந்த ஏவுகணையின் முதலாவது போர்க்களப் பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன.
ரஷ்யா தனது தாக்குதல்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் சொந்தமாகத் தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதைத் தனது பாதுகாப்புத் தேவைகளில் முக்கியமானதாகக் கருதுகிறது.
200 கிலோ மீட்டர் தாக்குதல் திறன்
உக்ரைன் ராணுவ ஆய்வாளர்களின் தகவலின்படி, FP-7 குறுகிய தூர ஏவுகணையாகும். சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அதன் முழுமையான தொழில்நுட்ப விவரங்களை உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்த ஏவுகணையை உக்ரைனைச் சேர்ந்த Fire Point நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஐரோப்பாவின் ‘Freyja’ ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிரி பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனுடனும் FP-7 மேம்படுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்
FP-7 ஏவுகணையின் சோதனை முடிவுகள் ராணுவப் பயன்பாட்டுக்கான நல்ல வாய்ப்பைக் காட்டுவதாக ஜெலென்ஸ்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது முதலாவது போர்க்களப் பயன்பாடு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ள அவர், அடுத்தகட்டமாக அதன் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Freyja ஐரோப்பிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பின் முதல் மாதிரியை அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் தயாரிக்க உக்ரைன் இலக்கு நிர்ணயித்துள்ளது.
