இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சாதனை

2020ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க எழுத்தாளர் லூயிஸ் க்ளூகிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்படுகின்றன. அதில் மருத்துவம், இயற்பியல், மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து அறிவிக்கபட்டது.

அதைதொடர்ந்து, இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் க்ளூகிற்கு, “கடினமான அழகு தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக ஆக்குகிறது” என்ற அவரது கவிதைக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 77 வயதான லூயிஸ் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெரும் முதல் அமெரிக்கர் ஆவார்.
பல கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ள இவருக்கு முன்னதாக அமெரிக்காவில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான புலிட்சர் விருதும் வழங்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, நாளை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

Exit mobile version