ஐக்கிய அரபு அமீரகம் பரிசோதனை நிலையில் உள்ள அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர அனுமதி அளித்தது.

துபாய்:
உலகையே உலுக்கி கொண்டு வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாய் இறங்கியுள்ளது. தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் அறிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, சீனா நாட்டின் தடுப்பூசிகள் உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.சீன அரசுக்கு சொந்தமான சின்போம் நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதித்து வருகிறது. இந்த தடுப்பு மருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் மருத்துவ பரிசோதனையை தொடங்கியது. தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் தடுப்பு மருந்து உள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை சுகாதார பணியாளர்கள் எடுத்துக்கொள்ள அவசரகால அனுமதியை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ கொரோனாவுக்கு எதிராக போராடும் முதன்மை பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.ஆகவே கொரோனா தடுப்பு மருந்தை அவர்களுக்கு கிடைக்க அவசரகால அனுமதி வழங்கியுள்ளோம்” எனக்கூறப்பட்டுள்ளது.
31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை நடத்திய பிறகே அவசர கால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் லேசான மற்றும் எதிர்பார்த்த சில பக்க விளைவுகள் ஏற்பட்டது. கடுமையான எந்த விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.